லாலுவின் மகன் பதவி விலகமாட்டார் என கட்சி அறிவிப்பு, லாலுவுடன் நிதிஷ் குமார் பேச்சு


லாலுவின் மகன் பதவி விலகமாட்டார் என கட்சி அறிவிப்பு, லாலுவுடன் நிதிஷ் குமார் பேச்சு
x
தினத்தந்தி 10 July 2017 4:09 PM IST (Updated: 10 July 2017 4:09 PM IST)
t-max-icont-min-icon

துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து தேஜஸ்வி விலகும் கேள்விக்கே இடம் கிடையாது என லாலுவின் கட்சி தெரிவித்துவிட்டது.


பாட்னா,

ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். இது அரசியல் சதிதிட்டம் என லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டினார். இந்த முறைக்கேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்து உள்ள எப்.ஐ.ஆர்.ரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்று உள்ளது. லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை முகமைகளின் வளையத்திற்குள் சிக்கிஉள்ளது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் லாலு பிரசாத் யாதவ் தொலை பேசியில் உரையாடி உள்ளார். பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடமும் லாலு பிரசாத் யாதவ் பேசிஉள்ளார். ஆனால் என்ன விவகாரம் பேசப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. நிதிஷ் குமார் அல்லது அவருடைய கட்சியனான ஐக்கிய ஜனதா தளம் இதுவரையில் சிபிஐ சோதனை தொடர்பாக எந்தஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. முந்திரிகா பிரசாத் யாதவ் பேசுகையில், “தேஜஸ்வி ராஜினாமா என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என கூறிஉள்ளார். தேஜஸ்வியின் பணியினை பலரும் பாராட்டுகின்றனர் என அம்மாநில மந்திரி அப்துல் பாரி சித்திக் பேசிஉள்ளார். 

Next Story