ரூ.8 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை: லாலுபிரசாத் மகள் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்
ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் சமீபத்தில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.
புதுடெல்லி,
இதன் தொடர்ச்சியாக லாலுபிரசாத் மகளும் டெல்லி மேல்–சபை எம்.பியுமான மிசா பாரதி மற்றும் அவரது கணவரான சைலேஷ்குமார் ஆகியோருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீடு மற்றும் ஒருநிறுவனத்திலும் கடந்த 8–ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பண மோசடி நடந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன்பு நிதி பரிவர்த்தனை ஆவணங்களுடன் மிசா பராதி மற்றும் அவரது கணவரும் நேற்று ஆஜராக அமலலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி லாலுபிரசாத் மகள் மிசாபாரதி நேற்று காலை 11 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆனார். ஆனால் அவரது கணவர் சைலேஷ்குமார் ஆஜராகவில்லை.
மிசா பாரதியிடம் ரூ.8 ஆயிரம் கோடி சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்றும் அந்த கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் அவர் அளிக்கும் பதிலை பொறுத்து அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லாலுபிரசாத் மகள் மிசா பாரதியின் ஆடிட்டர் ராஜேஷ்அகர்வால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.