உள்ளூர் விமானங்களில் பயணிக்க தடை: எம்.பி திவாகர் ரெட்டி நீதிமன்றத்தில் முறையீடு


உள்ளூர் விமானங்களில் பயணிக்க தடை: எம்.பி  திவாகர் ரெட்டி நீதிமன்றத்தில் முறையீடு
x
தினத்தந்தி 12 July 2017 2:26 PM IST (Updated: 12 July 2017 2:26 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கபட்டதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி திவாகர் ரெட்டி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி, இவர் கடந்த மாதம் விசாகபட்டணம் விமான நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய தாமதமாக வந்தார்.

இதனால் விமான நிறுவன ஊழியர், கவுன்ட்டர் மூடப்பட்டுவிட்டதால் நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அடுத்த விமானத்தில் பயணம் செய்யலாம் என்றார். உடனே அவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு தள்ளியதுடன் கோபத்தில் அங்கிருந்த ஒரு தட்டச்சு எந்திரத்தை தரையில் தள்ளிவிட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்தச் சம்பவங்களை கவனத்தில் கொண்டு, இண்டிகோ விமான நிறுவனம் முதலில் அவருக்கு தனது விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. அதையடுத்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ்  விஸ்தாரா, கோ ஏர், ஏர் ஆசியா உள்ளிட்ட 8 விமான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் உள்ளூர் விமானங்களில் பயணம்  செய்ய திவாகர் ரெட்டிக்கு தடை விதித்தது. 

இந்த தடையை  சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் தெலுங்கு தேசம்  கட்சி எம்.பி திவாகர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. 

Next Story