ஜியோ வாடிக்கையாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டவர் ராஜஸ்தானில் கைது
ஜியோ வாடிக்கையாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார் 1 கோடி பேரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியது நாடு முழுவதும் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஜியோ நிறுவனம் சார்பில் நவிமும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஜியோ வாடிக்கையாளர்கள் விவரங்களை வெளியிட்டவர்களை தேடிவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜியோ வாடிக்கையாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டவர் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் சுஜன்கார்க் பகுதியை சேர்ந்த இம்ரான் சிம்பா என்பது தெரியவந்தது.
இதையடுத்து நவிமும்பை போலீசார் கொடுத்த தகவலின்பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இம்ரான் சிம்பா விசாரணைக்காக நவிமும்பை அழைத்துவரப்பட உள்ளார். இம்ரான் சிம்பா பொறியியல் மாணவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ சிம் வாங்க மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் இல்லாமல், ரிலையன்ஸ் ஜியோ, ஆரம்பத்திலேயே சிம் கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்பதை கட்டாயமாக்கியது. ஆதார் எண் விவரங்களை அளித்து சுமார் 12 கோடிக்கும் மேற்பட்டோர் ஜியோ சிம் வாங்கினார்கள் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்களும் magicapk.com என்ற தனியார் இணையதளத்தில் வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை முகமைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. தொலை தொடர்பு துறையில் இவ்வளவு பெரிய அளவில் தகவல் தரவு கசிந்தது இதுவே முதல்முறையாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story