மராட்டியத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக ஒருவர் மீது கொடூரத் தாக்குதல்


மராட்டியத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக ஒருவர் மீது கொடூரத் தாக்குதல்
x
தினத்தந்தி 13 July 2017 10:28 AM IST (Updated: 13 July 2017 10:28 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக ஒருவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


நாக்பூர்,


நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. 

மராட்டிய மாநிலம் நாக்பூரின் பார்சிங்கி பகுதியில் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்வதாக ஒருவரை கொடூரக்கும்பல் தாக்கி உள்ளது. நேற்று இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை மராட்டிய போலீஸ் கைது செய்து உள்ளது. சலிம் இஸ்மாயில் ஷாவை (வயது 26) கும்பல் மிதித்தும், உதைத்தும் சித்தரவதை செய்து உள்ளது. பராகர் சங்காதான் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சலிம் இஸ்மாயிலை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதல்தாரிகளுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.வுடன் தொடர்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவானது உள்ளூர் எம்.எல்.ஏ. பாச்சு காதுவுடன் தொடர்புடையது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


Next Story