ரூ.2 கோடி லஞ்சம் வாங்கவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. மறுப்பு


ரூ.2 கோடி  லஞ்சம்  வாங்கவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. மறுப்பு
x
தினத்தந்தி 14 July 2017 4:30 AM IST (Updated: 14 July 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கவில்லை என்றும் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் கூறி உள்ளார்.

பெங்களூரு,

டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், தான் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கவில்லை என்றும் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளார்.

அ.தி.மு.க.(அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, கடந்த 10–ந்தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் மூலம் கண்டறிந்த முறைகேடுகள் குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு, அவர் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக தாங்கள் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:–

‘‘சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக உள்ள ரூபா, சிறையில் முறைகேடுகள் நடப்பதாக கூறி ஆய்வுக்கு பின் அறிக்கை அனுப்பி உள்ளார். அலுவலக நேரம் முடிந்த பிறகு அந்த அறிக்கை எனது அலுவலகத்துக்கு வந்து உள்ளது. உடனடியாக அந்த அறிக்கை ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது. அவரது அறிக்கை பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

 ஆய்வின் போது சிறையில் கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தாலோ, கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது பற்றி அறிந்திருந்தாலோ, அதுபற்றி ரூபா முதலில் என்னுடன் ஆலோசித்து இருக்க வேண்டும். என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். எனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரி என்ற முறையில் அவர் இவ்வாறு செய்திருக்க வேண்டும்.

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. சசிகலாவுக்கு சிறையில் எந்தவிதமான சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தனி சமையல் அறை எதுவும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில்தான் அவர் தங்கி இருக்கிறார்.

சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் அவருக்கும் வழங்கப்படுகிறது. சசிகலாவுக்கு உயர்தர சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழக மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் சசிகலாவை சந்திக்க வரும்போது, சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சசிகலா உள்பட எந்த ஒரு கைதிக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. டி.ஐ.ஜி. ரூபா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாக ரூபா தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். நான் கைதிகளிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கியது இல்லை. அவர்களிடம் இருந்து ஒரு பிஸ்கெட் கூட வாங்கி சாப்பிட்டது இல்லை.

சிறையில் டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு நடத்த எந்த தடையும் இல்லை. அதற்காக சிறையில் ஆய்வு செய்ததை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தவறானது. மேலும் முதல்–மந்திரி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் அவர் சிறையில் சென்று ஆய்வு நடத்தி உள்ளார். அதனால் தான் அவருக்கு விளக்கம் கேட்டு 2 நோட்டீசுகள் அனுப்பி உள்ளேன்.

சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக தற்போது தான் ரூபா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிறைத்துறை பற்றி  எதுவும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது ஏற்கனவே நடந்து வருகிறது. அது ஒன்றும் புதிது அல்ல. கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். அதுபோன்ற கைதிகள் கஞ்சா பயன்படுத்துகிறார்களா? என்று மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்துவது உண்மை என்று தெரியவந்துள்ளது.

நான் அனுப்பிய நோட்டீசுகளுக்கு உரிய பதில் அளிக்காமல் ரூபா பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு உள்ளார். இதில் சதித்திட்டம் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். என் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.   

இவ்வாறு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் கூறினார். 

Next Story