டி.ஐ.ஜி. ரூபா போன்ற அதிகாரிகள் இந்தியாவிற்கு தேவை, கிரண்பெடி பாராட்டு


டி.ஐ.ஜி. ரூபா போன்ற அதிகாரிகள் இந்தியாவிற்கு தேவை, கிரண்பெடி பாராட்டு
x
தினத்தந்தி 14 July 2017 7:32 PM IST (Updated: 14 July 2017 7:32 PM IST)
t-max-icont-min-icon

சிறையில் சிறப்பு வசதிகளை பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார் என தகவல் வெளியிட்ட அதிகாரி ரூபாவிற்கு கிரண்பெடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி,  
 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர். இதனையடுத்து டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். 

சோதனை நடத்திய ரூபா டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு அளித்த அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. 

சிறை விதிமுறைப்படி இது தவறு. இந்த சலுகை இன்னும் தொடருவதாக உள்ளது. இதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து இருந்தார். இது மீடியாக்களில் வெளியாகியது. ரூபாவின் அறிக்கை சமர்பித்த நிலையிலும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவின் நடவடிக்கைக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரூபா எந்த இடத்தில் பணியாற்றினாலும் இதுபோல் உறுதியாக இருக்கவேண்டும். உங்களை போன்றவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேவை. நீங்கள் எதிர்கால இளைஞர்களின் உந்துசக்தியாக இருப்பீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறை தொடர்பாக குற்றச்சாட்டுகள் வரும்போது உடனே உயர் அதிகாரிகளுடன் கூட்டாக சென்று ஆய்வு செய்தால் அது சிறப்பாக இருக்கும். அதுதான் தலைமை பண்புக்கு சரியானதாகவும் இருக்கும். 

சிறை கண்காணிப்பை முறையாக செய்ய ஏன் சரியான நடமுறைகள் இல்லை? அதற்கு உரிய தொழில்நுட்பங்களை ஏன் பயன்படுத்தவில்லை? என குறிப்பிட்டு உள்ளார். 

இப்போதைய நாட்களில் இதுபோன்ற அதிகாரிகளை காண்பது எளிதானது கிடையாது. உண்மையை வெளிக்கொண்டுவர பேசும் மற்றும் எழுதும் தைரியம் கொண்ட அதிகாரிகளுக்கு உயர்மட்டத்தில் இருந்து ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்பது தெரியும் எனவும் குறிப்பிட்டு உள்ளார் கிரண்பெடி. கவர்னரின் பாராட்டுக்கு டி.ஐ.ஜி. ரூபாவும் நன்றி தெரிவித்து உள்ளார். உங்களது ஆதரவு வார்த்தை எனக்கு 100 யானைகளின் பலத்தை கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  


Next Story