பரப்பன அக்ரஹாரா சிறை, பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் பரபரப்பான தகவல்கள்


பரப்பன அக்ரஹாரா சிறை, பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் பரபரப்பான தகவல்கள்
x
தினத்தந்தி 16 July 2017 10:18 AM IST (Updated: 16 July 2017 10:18 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் என்னதான் நடக்கிறது, நடக்கிற நிகழ்வுகளுக்கு காரணம் யார்? ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளன.


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை பரபரப்புக்கு பெயர் பெற்று விட்டது.

சசிகலா, வி.என்.சுதாகரன், போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட பிரபலமான கைதிகளால் மட்டுமல்ல, அங்கு நடந்து வரும் நிகழ்வுகளாலும் இந்த சிறை தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் விவாதப்பொருளாகி வருகிறது.

அதிநவீன மாடுலர் சமையல் அறையில் விதவிதமான உணவுகளை மணக்க மணக்க சமைத்து பரிமாறியதில் தொடங்கி சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டுகளை அடுக்க அதை டி.ஜி.பி., எச்.என்.சத்தியநாராயண ராவ் மறுக்க, இது குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த சிறையில் என்னதான் நடக்கிறது, நடக்கிற நிகழ்வுகளுக்கு காரணம் யார்? ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளன.

கர்நாடக சிறைவிதிப்படி, சிறைக்கைதிகள் இடையே ஒரு பஞ்சாயத்து உருவாக்கி, சிறையில் சக கைதிகளின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறை பஞ்சாயத்து, சிறை அதிகாரிகளின் தலைமை சூப்பிரண்டு கிருஷ்ண குமார், சூப்பிரண்டு அனிதா ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் (?) தான். சிறை பஞ்சாயத்து உறுப்பினர்கள், சக கைதிகளால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் அந்த விதி தற்போது காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து உறுப்பினர்களை சிறையின் தலைமை சூப்பிரண்டு நியமனம் செய்திருக்கிறார். ஏறத்தாழ 10 உறுப்பினர்கள் 6 மாத பதவிக்காலம் முடிந்தும், தொடர்கின்றனர். இதுவும் விதி மீறல்.

இந்த பஞ்சாயத்து உறுப்பினர்களில் 2 பேர் பிரபலம். அவர்கள், ராகேஷ், புட்டா ஆவார்கள். இவர்கள் இருவரும்தான் சிறையின் ஊழல் அதிகாரிகளுக்கு இடது கையும், வலது கையுமாய் இருக்கிறார்கள்.

சசிகலாவை ஸ்பெஷலாக கவனிப்பது, அதாவது அவரது அன்றாட தேவைகள்- காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு, மாலை நேர நொறுக்குத்தீனி வழங்குதல் என அத்தனையையும் கவனிக்கிற இடத்தில் ராகேஷ் வைக்கப்பட்டுள்ளார். இதில் இவரை அமர்த்தியது தலைமை சூப்பிரண்டு கிருஷ்ண குமார். ராகேஷ், சிறை சமையல் அறையில் இருந்து சசிகலாவுக்கும், வி.என்.சுதாகரனுக்கும் நாள் முழுவதும் 2 பை நிறைய உணவுகளை எடுத்துச்செல்வதை ரகசிய கண்காணிப்பு கேமராவில் இருந்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சுட்டிக்காட்டியது, இங்கே குறிப்பிடத்தக்கது.

புட்டாவை பொறுத்தமட்டில் பிரபலங்கள் அனைவருக்குமான சேவைகள் இடையூறின்றி நடப்பதை உறுதி செய்யும் இடத்தில் உள்ளார்.

கிருஷ்ண குமாரும், அனிதாவும் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கம். நெருக்கம் என்றால், அவர்களது அறைகளில் சசிகலா மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நெருக்கம்தான், சிறை உயர் அதிகாரி ஒருவரது காரில் சசிகலா, சிறையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு 3 முறைக்கும் மேலாக இதுவரை சென்று வர துணை நின்றிருக்கிறது. 

சிறையில் கொடுக்கும் வெள்ளை நிற துண்டு சீட்டை வெளியே உள்ள சசிகலாவின் உறவினரிடம் போய்க்கொடுத்தால் கொடுப்பவருக்கு ரொக்கப்பரிசு, வேலைக்கு ஏற்றாற்போல வழங்கப்படுமாம். இப்போதோ விசாரணை வளையத்தில் சிக்கியபிறகு, சசிகலாவும் மற்ற தண்டனை கைதிகளைப்போல சீருடைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று சிறை வட்டாரங்கள் சொல்கின்றன.

சிறைக்குள் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், பஞ்சாயத்து உறுப்பினர் கைதிகளான சிவகுமாருக்கும், வி.ராமாவுக்கும் தரப்பட்டிருக்கிறதாம். தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமாருடனான நெருக்கம் காரணமாக, இவர்கள் மாலை 6 மணிக்கு சிறை அறைகள் பூட்டப்பட்ட நிலையிலும், சிறை வளாகத்தில் சுற்றித்திரிய முடியும். பிரபலங்களுக்கு செல்போன்கள் உள்பட என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துக்கொள்வார், ஆனந்த் என்ற கைதி. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை. அது மீறப்படுவதே இல்லை. இவற்றில் பலவும் டி.ஐ.ஜி. ரூபாவின் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறதாம்.

அனைத்து ஜெயிலர்கள், வார்டர்கள், அதிகாரிகள், அவர்களின் சொத்துகள், ஏன் வீடுகள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், சசிகலா வருகைக்கு பின்னர் என்னென்ன பரிமாற்றங்களை சிறைத்துறையினர் செய்துள்ளனரோ அத்தனையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றிருக்கின்றன. தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமாரை இடமாற்றம் செய்வதற்கு டி.ஜி.பி., எச்.என்.சத்தியநாராயண ராவ் 3 முறை பரிந்துரை செய்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணி என்னவோ?

போலி முத்திரைத்தாள் மன்னன் என்ற பெயர் பெற்ற தெல்கியின் ராஜ்ஜியமும், பரப்பன அக்ரஹாரா சிறையில் கொடி கட்டித்தான் பறந்திருக்கிறது. அவரது அறையில் 64 அங்குல எல்.இ.டி. டி.வி., மினரல் வாட்டர் கேன், கட்டில், மெத்தை, மின் விசிறி என்று சொகுசான வாழ்க்கை. சசிகலா விவகாரம் வெடித்தபின்னர், இப்போது தெல்கியின் அறையில் இருந்து டி.வி., பர்னிச்சர்கள் அகற்றப்பட்டு விட்டனவாம்.
இருப்பினும் சிறையில் தெல்கி வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையும், டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டுகள் அர்த்தமுள்ளவை என்று காட்டுபவையாகத்தான் அமைந்துள்ளன.

சசிகலா தொடங்கி தெல்கி வரை பிரபல கைதிகளால் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்துள்ள விதி மீறல்கள், தண்டிக்கப்படுமா அல்லது கால ஓட்டத்தில் கரைந்து போய் விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story