ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் - குர்கா ஜன்முக்தி மோர்சா உறுப்பினர்கள் இடையே வார்த்தை போர்
ஜனாதிபதி தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் - குர்கா ஜன்முக்தி மோர்சா உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கொல்கத்தா,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் அம்மாநில சட்டசபை வளாகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேற்கு வங்காளத்தில் குர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம், வன்முறை நடந்து வருவதால் டார்ஜிலிங் பகுதியில் அமைதியின்மை தொடர்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் களம் இறக்கி உள்ள மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இடதுசாரிகளும் மீரா குமாருக்கே ஆதரவு தெரிவித்து உள்ளனர். மாநிலத்தில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் 294-ல் 288 பேர் மீரா குமாருக்கே ஆதரவு தெரிவித்து உள்ளனர். மூன்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூன்று குர்கா ஜன்முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் மட்டும் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு தொடந்து நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் குர்கா ஜன்முக்தி மோர்சா உறுப்பினர்கள் இடையே வார்த்தை போர் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. டார்ஜிலிங் அமைதியின்மை விவகாரம் சட்டசபை வாக்களிப்பிலும் எதிரொலித்தது. குர்காலாந்து எம்.எல்.ஏ.க்கள் டார்ஜிலிங் அமைதியின்மை தொடர்பாக பேசி நாங்கள் பற்றி எரியும் மலையில் நாங்கள் அமர்ந்து இருக்கிறோம் என்றார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் மற்றும் குர்காலாந்து எம்.எல்.ஏ. பால் இடையே வார்த்தை வாதம் நேரிட்டது. குர்காலாந்து எம்.எல்.ஏ. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. திலிப் கோஷ்யையும் விமர்சனம் செய்தார்,
டார்ஜிலிங் அமைதியின்மைக்கு பின்னணியில் அவர் உள்ளதாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வார்த்தைப்போர் ஏற்பட்டது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “நாடு முழுவதும் இப்போது காணப்படும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் மீரா குமாருக்கு வாக்களித்து உள்ளோம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தில் ஒன்றாக இணைந்து உள்ளது. இது மிகவும் சரியான நேரம். பாராளுமன்றத்தில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவோம். நாங்கள் சிறைக்கு செல்லாத தயாராக இருக்கிறோம், தலை வணங்கமாட்டோம்,” என கூறினார்.
Related Tags :
Next Story