காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர், 9 வயது சிறுமி சாவு


காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர், 9 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 18 July 2017 3:45 AM IST (Updated: 18 July 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு, 

காஷ்மீரில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய வீரர்கள் மட்டுமின்றி எல்லையோர கிராம மக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு இரு நாடுகளுக்கு இடையே அமலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பகுதிகளில் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

சமீப காலமாக அடிக்கடி நடந்து வரும் இந்த தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. இதில் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களின் எல்லையோர கிராம பகுதிகள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இலக்காகி சேதம் அடைந்தன.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த பீரங்கி தாக்குதல் காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதில் ரஜோரி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ராணுவ பதுங்கு குழிகளில் பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதில் முத்தாசர் அகமது (37) என்ற ராணுவ வீரர் படுகாயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்குள்ள டச்சூ கிராமத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த முத்தாசர் அகமது, மிகவும் நேர்மையான மற்றும் தைரியமான வீரர் என ராணுவம் கூறியுள்ளது. தனது பணியை மிகவும் நேசித்து வந்த அவரின் இந்த மிகப்பெரிய தியாகத்துக்கு தேசம் கடமைப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதைப்போல பாலாகோட், மஞ்சகோட் மற்றும் பரோட்டி எல்லைப்புற பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதில் பரோட்டி பகுதியை சேர்ந்த சஜதா ஹவுசர் என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மஞ்சகோட் பகுதியில் ஒரு ராணுவ வீரர் உள்பட 3 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லைப்பகுதியில் கடும் தாக்குதல் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் இல்லை.

காஷ்மீர் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் பாலாகோட், மஞ்சகோட் உள்ளிட்ட எல்லைப்புற பகுதிகளில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என ராணுவம் எச்சரித்து உள்ளது.

இதற்கிடையே இந்திய ராணுவ நடவடிக்கைகள் இயக்குனர் ஏ.கே.பட், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எல்லைப்பகுதி நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்பதை ஏ.கே.பட் விளக்கினார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய அத்துமீறல் செயல்களுக்கு இந்த மாதம் மட்டும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லைப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

Next Story