உங்கள் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது, ஏன் அரசுக்கு கூடாது: உச்ச நீதிமன்றம் கேள்வி


உங்கள் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது, ஏன் அரசுக்கு கூடாது: உச்ச நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 20 July 2017 9:42 PM IST (Updated: 20 July 2017 9:42 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஆப்பிள் நிறுவனம் பெறுகிறது, ஏன் அரசு பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் ஆதார் அடையாள அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஆதார் தொடர்பான இன்றைய விசாரணையின் போது, நீதிபதி டிஒய் சந்திரஷூட், மனுதாரரிடம் தனியார் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட தகவல்களை அரசிடம் ஏன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து  நீதிபதி கேட்கையில்,”  ஆப்பிள் போன்ற தனியார் நிறுவனங்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருவர் பகிர்ந்து கொள்ளும் போது ஏன் அரசாங்கத்திடம் அதை பகிர்ந்து கொள்ள கூடாது? என்ன வேறுபாடு இதில் உள்ளது? 

99 சதவீத மக்கள்  இத்தகைய தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்கள் எடுத்துக்கொள்வதை பற்றி கவலைப்படுவதில்லை தெரியாமலும் உள்ளனர். எடுத்துக்காட்டாக, ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் பயனாளர்களின் கை விரல் ரேகை மூலமாக  உள்நுழைவு வசதியை கொண்டுள்ளது. தனிநபர் ஒருவர் ரயில் டிக்கெட் புக் செய்தால், மின்னஞ்சல்கள் அல்லது பாப் அப் விளம்பரங்கள் அதே பயணத்திற்கான மாற்று விமான வசதிகளை காட்டுகிறது. தனது தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை  குடிமகன்கள் ஏற்கனவே பகிர்ந்து கொண்டதை இது நிருபிக்கிறது” நீதிபதி இவ்வாறு கூறினார்.

இதற்கு மனுதாரர் சஜன் பூவய்யா வாதிடும் போது,  “ தனியார் நிறுவனம் என் சொந்த விவரங்களை எடுத்து அனைவருக்கும் தெரியும்படியாக வெளிப்படுத்தினால் ஒப்பந்தத்தை மீறியதாக நான் அவர்கள் மீது வழக்கு போட முடியும். ஆனால் அரசுக்கு அளித்தேன் என்றால் அதற்கான பாதுகாப்புகள் என்ன?  என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது போன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. வரும் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

Next Story