காவிரி மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 6-வது நாளாக கர்நாடக அரசு வாதம்
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் நேற்று 6-வது நாளாக கர்நாடக அரசின் வாதம் தொடர்ந்தது.
புதுடெல்லி,
காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 6-வது நாளாக விசாரணை தொடர்ந்தது.
கர்நாடகா தரப்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவான் நேற்று வாதாடுகையில், காவிரி நடுவர் மன்றம், கர்நாடகாவின் உண்மை நிலையை, தேவையை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பை வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் தண்ணீரை பங்கீடு செய்ததில் தமிழகத்தில் கிடைக்கும் நிலத்தடிநீரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வேண்டிய அளவு நிலத்தடிநீரை கொண்டு பாசனம் செய்துவரும் தமிழ்நாடு தங்கள் தேவைக்கு அதிகமாக நீர்ப்பங்கீடு கோரி வழக்குகளை தொடுத்து வருகிறது என்றார்.
நீதிபதிகள் கேள்வி
இதற்கு நீதிபதிகள், தமிழ்நாட்டில் கிடைக்கும் நிலத்தடிநீரை பற்றி எடுத்துரைக்கும் நீங்கள் கர்நாடகாவில் கிடைக்கும் நிலத்தடிநீரையும் கணக்கில் கொள்ளவேண்டும் அல்லவா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஷியாம் திவான், தமிழ்நாட்டை ஒப்பிடும்போது கர்நாடகாவில் நிலத்தடிநீர் கிடையாது. காவிரியை நம்பியே அங்கு பாசனம் நடைபெறுகிறது. அதுதவிர பெங்களூரு நகரின் குடிநீர் தேவைகளையும் காவிரியின் துணை கொண்டே பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. பெருநகரம் ஒன்றின் குடிநீர் தேவையை புறக்கணித்து நிலத்தடிநீர் திறன் கொண்ட மாநிலத்துக்கு தேவைக்கு அதிகமான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவது நியாயமானது அல்ல.
அதிகரிக்க வேண்டும்
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து தமிழகத்துக்கு திறந்துவிடும் தண்ணீரின் அளவை குறைத்து கர்நாடகாவுக்கான தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்யும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு.
இவ்வாறு ஷியாம் திவான் கூறினார். முறையான நீர்பங்கீடு குறித்து தங்கள் தரப்பில் மேலும் சில வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே வருகிற செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசின் வாதங்கள் மேலும் தொடரும்.
Related Tags :
Next Story