மோடியின் கொள்கைகளால் காஷ்மீர் பற்றி எரிகிறது: ராகுல் காந்தி சொல்கிறார்
பிரதமர் மோடியின் தவறான அணுகுமுறையாலே காஷ்மீர் பற்றி எரிவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பற்றி எரிவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளே காஷ்மீர் பற்றி எரிவதற்கு காரணம். இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.
காஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிட வேண்டும் என சொல்வது தவறு. இந்தியா தான் காஷ்மீர். காஷ்மீர் தான் இந்தியா. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இந்தியாவின் சொந்த பிரச்சினையில் வேறும் யாரும் தலையிட முடியாது” முன்னதாக, காஷ்மீர் பிரச்னையை தீர்க்க அமெரிக்கா அல்லது சீனாவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து ஒராண்டுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர் வன்முறைகள் நிலவுகின்றன. இதனால், பல இடங்களில் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை.
Related Tags :
Next Story