அஞ்சலக பேமண்ட் வங்கி: பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்


அஞ்சலக பேமண்ட் வங்கி: பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Sept 2018 7:52 AM IST (Updated: 1 Sept 2018 7:52 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சலக பேமண்ட் வங்கி சேவையை பிரதமர் மோடி இன்று டெல்லியில் துவங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ஒரே நேரத்தில் 650 பேமண்ட் வங்கிக் கிளைகளும், 3,250 சேவை மையங்களும் திறக்கப்பட இருக்கின்றன. நாட்டில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேமண்ட் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் வங்கிச் சேவையில் அஞ்சலக பேமண்ட் வங்கிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த பேமண்ட் வங்கிகளில் சேமிப்பு, நடப்பு கணக்கு தொடங்குதல், பணப் பரிமாற்றம், அரசின் நேரடி மானியங்களைப் பெறுதல், பல்வேறு கட்டணங்களைச் செலுத்துதல், கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளைப் பெற முடியும். இது தொடர்பான செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

ஏற்கெனவே, ஏர்டெல், பே-டிஎம் ஆகிய நிறுவனங்கள் பேமண்ட் வங்கி சேவையில் முன்னிலையில் உள்ளன. அவற்றுக்கு அஞ்சலக பேமண்ட் வங்கியும் ஈடுகொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அஞ்சலக பேமண்ட் வங்கிக்கு கூடுதலாக ரூ.635 கோடியை மத்திய அரசு இரு நாள்களுக்கு முன்பு ஒதுக்கியது.

இது ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 80 சதவீத அதிகரிப்பாகும். இதன் மூலம் மொத்தம் ரூ.1,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் ரூ.400 கோடி தொழில்நுட்பரீதியாக அஞ்சலக பேமண்ட் வங்கியை மேம்படுத்தவும், ரூ.235 கோடி மனிதவள மேம்பாட்டுக்கும் செலவிடப்பட இருக்கிறது


Next Story