தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார், ரஞ்சன் கோகாய்


தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார், ரஞ்சன் கோகாய்
x
தினத்தந்தி 2 Sept 2018 5:30 AM IST (Updated: 2 Sept 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

வழக்கமான நடைமுறையின்படி, இதுபற்றி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு பரிந்துரை செய்து இருக்கிறார். அதன்படி, ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிடும்.

63 வயதாகும் ரஞ்சன் கோகாய் அசாம் முன்னாள் முதல்-மந்திரி கேசப் சந்திர கோகாயின் மகன் ஆவார். பஞ்சாப்-அரியானா மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ள இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Next Story