ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: காங்கிரஸ் கட்சி, கோர்ட்டுக்கு செல்லுமா? ப.சிதம்பரம் பதில்


ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: காங்கிரஸ் கட்சி, கோர்ட்டுக்கு செல்லுமா? ப.சிதம்பரம் பதில்
x
தினத்தந்தி 2 Sept 2018 5:45 AM IST (Updated: 2 Sept 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, கோர்ட்டை அணுகுமா? என்ற கேள்விக்கு ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

நாக்பூர், 

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, கோர்ட்டை அணுகுமா? என்று கேட்டதற்கு ப.சிதம்பரம் கூறியதாவது:-

இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு தீர்வு அல்ல. எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு செல்வது இந்தியாவில் ‘பேஷன்’ ஆகிவிட்டது. ரபேல் பற்றி விவாதம் நடத்த வேண்டிய இடம், நாடாளுமன்றம். அங்குதான், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள். விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதிக்காவிட்டால், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

ரபேல் விமான கொள்முதலை ‘அவசர கொள்முதல்’ என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாதது. இந்த விவகாரத்தை போபர்ஸ் விவகாரத்துடன் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால், போபர்ஸ் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று டெல்லி ஐகோர்ட்டு சொல்லி இருக்கிறது. ரபேல் விவகாரத்தில், சரியான பதில்கள் வராவிட்டால், இது ஊழல்தான் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Next Story