ஆர்டிஐ சட்டத்தில் பதில் கோரியதற்கு ஜிஎஸ்டி வசூலிப்பு ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அதிர்ச்சி
ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் பதில் கோரி மனுதாக்கல் செய்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலரிடம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் வீட்டுவசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரி, ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அஜய் துபேயிடம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. மாநிலத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் அலுவலகத்தை புனரமைத்தது, புதிய கட்டிடங்கள் கட்டியதற்கு ஆன செலவு எவ்வளவு என்பது தொடர்பான தகவல்களை கேட்ட அவரிடம், ஜிஎஸ்டி வரி செலுத்தினால் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் துபே மனுதாக்கல் செய்த போது மத்திய பிரதேசம் வீட்டுவசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியம், தேவையான சேவையை பெறுவதற்கும், ஆவணங்கள் பெறுவதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என தெரிவித்ததுள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி துபே 45 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 பக்கங்களை நகலெடுக்க ரூ.36 கட்டணமும், மாநில, மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.7 என மொத்தம் ரூ.43 கட்டணமாக செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அஜய் துபே பேசுகையில், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி வசூலிப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது, இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு முன்னதாக என்னுடைய கோரிக்கையை முன்வைப்பேன்,” என கூறியுள்ளார்.
இவ்வருட ஜனவரியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2005 ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் தகவல்கள் சேவையின் கீழ் வந்தாலும், அதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று பிப்ரவரியில் மத்திய தகவல் ஆணையமும், ஆர்டிஐ மனுவின் கீழ் தகவல்களை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணங்கள் வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story