ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு


ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Sept 2018 6:43 AM IST (Updated: 4 Sept 2018 7:09 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.  இந்த குண்டு வெடிப்பில் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. தாக்குதலில் தொடர்புடைய பங்கரவாதிகள் ஷாஃபிக் சையது, முகமது ஷாதிக், அக்பர் இஸ்மாயில் செளதரி, அன்சார் அகமது ஷேக் ஆகியோரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் கடந்த 2008 அக்டோபரில் கைது செய்தனர். கொலை, பயங்கரவாத சதி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

இந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை, ஹைதராபாதில் உள்ள 2-ஆவது கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேருக்கு எதிராகவும் 4 குற்றப்பத்திரிகைகளை ஹைதராபாத் காவல்துறை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்தனர். மேலும் குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளான ரியாஸ் பத்கால், இக்பால் பத்கல் ஆகியோரை தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 27ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கின் மீதான தீர்ப்பு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி டி. ஸ்ரீநிவாச ராவ் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் ஐதராபாத் 2-ஆவது கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளது.

இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேருக்கு எதிராகவும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவு, வெடிப் பொருள் தடை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லும்பினி பார்க் பகுதியில் அனீக் ஷபீக் சயீது வெடிகுண்டுகளை மறைத்து வைத்ததாகவும், கோகுல் சாட் பகுதியில் ரியாஸ் பத்கல் வெடிகுண்டை மறைத்து வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை இஸ்மாயில் சௌதரி மறைத்து வைத்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. தாரிக் அஞ்சம் மீது குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தங்குவதற்கு இடமளித்து உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Next Story