உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: 3 நாட்களுக்கு 26 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். #UPRain
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர்.
இந்நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்தது. இதனால் ஜான்சி, எட்டவா, ரேபரேலி மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறுகையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகமைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Related Tags :
Next Story