மோடியுடன் வெளிநாடு பயணத்தில் சென்ற அரசு சாராத தனிநபர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்


மோடியுடன் வெளிநாடு பயணத்தில் சென்ற அரசு சாராத தனிநபர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Sept 2018 5:15 AM IST (Updated: 5 Sept 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

மோடியுடன் வெளிநாடு பயணத்தில் சென்ற அரசு சாராத தனிநபர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 2015–16, 2016–17–ம் ஆண்டுகளில் வெளிநாடு பயணம் சென்ற போது செலவிடப்பட்ட தொகை, அவருடன் சென்ற அரசு சாராத தனிநபர்கள் குறித்து தெரிவிக்கக்கோரி கரபி தாஸ் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேட்டு இருந்தார்.

ஆனால் அவருக்கு செலவுத்தொகை பற்றிய விவரம் மட்டுமே அளிக்கப்பட்டது. தனிநபர்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இதனால் சுரபி தாஸ் சார்பில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் இது குறித்து மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரிடம் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான விசாரணையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், பிரதமர் மோடியுடன் சென்ற தனிநபர் குறித்த பதிவேடு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மனுதாரர் ரூ.224–ஐ அமைச்சகத்துக்கு செலுத்தினால், அவர் கேட்ட தகவல் கிடைக்கும் போது அளிப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், பிரதமர் மோடியுடன் வெளிநாடு சென்ற அரசு சாராத தனிநபர்கள் குறித்த விவரங்களை மனுதாரருக்கு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story