டெல்லி கிசான் காட் பகுதியில் விவசாயிகளின் பேரணி நிறைவடைந்தது


டெல்லி கிசான் காட் பகுதியில் விவசாயிகளின் பேரணி நிறைவடைந்தது
x
தினத்தந்தி 3 Oct 2018 9:25 AM IST (Updated: 3 Oct 2018 9:25 AM IST)
t-max-icont-min-icon

ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளின் பேரணி கிசான் காட் பகுதியில் இன்று காலை நிறைவடைந்தது.

புதுடெல்லி,

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, விவசாய கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மேலும் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய டிராக்டர்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உத்தரகாண்டின் ஹரித்துவார் நகரில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்கள் மற்றும் டிராலியில் விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர்.

எனினும் இந்த ஊர்வலம் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி எல்லைகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளை நள்ளிரவில் டெல்லிக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.  இதனை அடுத்து அவர்கள் கிசான் காட் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.  அவர்களது ஊர்வலம் கிசான் காட் பகுதியில் இன்று காலை நிறைவடைந்து உள்ளது.


Next Story