எழுத்தறிவு தேர்வில் சாதனை படைத்த 96 வயது மூதாட்டி; கேரள முதல் மந்திரி சான்றிதழ் வழங்கினார்


எழுத்தறிவு தேர்வில் சாதனை படைத்த 96 வயது மூதாட்டி; கேரள முதல் மந்திரி சான்றிதழ் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Nov 2018 6:31 PM IST (Updated: 1 Nov 2018 6:31 PM IST)
t-max-icont-min-icon

கற்பதற்கு வயது தடை இல்லை என நிரூபித்த 96 வயது மூதாட்டிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று சான்றிதழ் வழங்கினார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபாதம் நகரில் செப்பட் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்தியாயனி அம்மா (வயது 96).  இவர் அக்ஷரலக்ஷம் திட்டத்தின் கீழ் கேரள அரசின் எழுத்தறிவு இயக்கம் நடத்திய எழுத்தறிவு தேர்வில் கலந்து கொண்டார்.

இதில் மிக அதிக வயது கொண்ட நபராக தேர்வெழுதிய இவர் எழுத்து தேர்வில் 40க்கு 38 மதிப்பெண்களும், கணிதம் மற்றும் வாசித்தல் ஆகியவற்றில் தலா 30க்கு 30 என முழு மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.  இதனால் 100க்கு 98 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இதனை அடுத்து அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் அக்ஷரலக்ஷம் சான்றிதழை இன்று வழங்கினார்.

கேரளா முழுவதும் 2 ஆயிரம் வார்டுகளில் மொத்தம் 43,330 பேர் தேர்வெழுதியதில் 42,933 பேர் தேர்ச்சி பெற்றனர்.  100 சதவீத எழுத்தறிவு பெற வேண்டும் என்ற சாதனையை படைக்க இடது ஜனநாயக முன்னணி அரசானது இந்த திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

Next Story