”ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை” நக்சலைட் இயக்கம் விளக்கம்


”ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை” நக்சலைட் இயக்கம் விளக்கம்
x
தினத்தந்தி 2 Nov 2018 4:09 PM IST (Updated: 2 Nov 2018 4:09 PM IST)
t-max-icont-min-icon

ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று நக்சலைட் இயக்கம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியான தண்டேவாடா மாவட்டத்தில் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆராய்ந்து செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் அங்கு சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர்.

ஆரன்பூர் என்கிற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப் உள்பட 2 போலீசாரும், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்தன் என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் போலீசார் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இந்தநிலையில்,  செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நக்சல் இயக்கத்தின் தலைவர் சாய்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதில், ''பதுங்கியிருந்த நிலையில் பிடிபட்ட தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த் சாஹு கொல்லப்பட்டார். ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை''   வழக்கம் போல தங்களுக்கும் போலீசாருக்குமான மோதலின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல் என்றும் அப்போது தூர்தர்ஷன் செய்திக்குழுவினரும் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மறுத்துள்ள தண்டேவாடா எஸ்பி அபிஷேக் பல்லாவ், ''சாஹு தவறுதலாகக் கொல்லப்பட்டார் என்றால் ஏன் கேமராக்கள் சூறையாடப்பட்டன? அதில் ஊடகவியலாளர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது.

உயிர்த் தியாகம் செய்த அச்சுதானந்த சாஹுவின் மண்டை சேதமடைந்திருந்தது. அவரின் உடலில் ஏராளமாக புல்லட் காயங்கள் இருந்ததும் தெரியாமல் நடந்ததா'' என்று நக்சல் இயக்கத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story