அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி  - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2018 10:26 PM IST (Updated: 2 Nov 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள கோவில், மசூதி மற்றும் சவுராஷ்டிர கோவில்கள் என அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி சஞ்சிவ் குமார் என்ற வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பெண்களை அவர்கள் பின்பற்றும் மதங்களில் பூசாரி, இமாம், பாதிரியார் ஆக நியமிக்க வேண்டும் எனவும் அவர் அதில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த (டெல்லி) கோர்ட்டு அதிகார வரம்புக்குள் எந்த கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இந்த கோர்ட்டு அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது’ என கூறினர்.

இவ்வாறு அதிகார வரம்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க முடியாது எனக்கூறி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மனுதாரர் தனது மனுவில், ஆற்றுக்கால், சக்குளத்துக்காவு போன்ற பெண்களை மட்டுமே அனுமதிக்கும் கோவில்களில் ஆண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story