அய்யப்ப பக்தர்கள் சமூக அமைப்பு அலுவலகம் சூறை - கேரளாவில் பதற்றம்


அய்யப்ப பக்தர்கள் சமூக அமைப்பு அலுவலகம் சூறை - கேரளாவில் பதற்றம்
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 3 Nov 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதை எதிர்க்கும் சமூக அமைப்பின் அலுவலகம் சூறையாடப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை வருவதை பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகியவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாக கேரளாவில் என்.எஸ்.எஸ். என்கிற நாயர் சேவை சமூகம் இது தொடர்பாக கேரள அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் அருகேயுள்ள நெமோம் என்னும் இடத்தில் உள்ள என்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர், இந்த அமைப்பின் தலைவர் ஜி.சுகுமாறன் பெயரில் மலர் வளையம் ஒன்றை அங்கு வைத்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதை நேற்று காலை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து என்.எஸ்.எஸ். அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 21-ந் தேதி சபரிமலை நிலக்கல்லில் காணாமல் போனதாக கூறப்பட்ட பந்தளம் பகுதியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் சிவதாசனின் (வயது 60) உடலை கேரள போலீசார் நேற்று முன்தினம் அடர்ந்த காட்டில் இருந்து மீட்டனர். அவர் தற்செயலாக இறந்து விட்டார் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தியபோது போலீசார் தாக்கியதால்தான் சிவதாசன் இறந்துவிட்டார் என்று கூறி போலீசாருக்கு எதிராக பத்தனம் திட்டா நகரில் நேற்று பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த நகரில் நேற்று பெரும்பாலான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ்களும், ஆட்டோக்களும் ஓடவில்லை.

தற்செயல் இறப்பை பா.ஜனதாவினர் அரசியலாக்குவதாக கேரள தேவசம் மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சித்திரை திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி வருகிற 5-ந் தேதி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை வரை ஒரு நாள் பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் அதிக அளவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 5 நாட்கள் திறக்கப்பட்டது. அப்போது, பெண்களை வரவிடாமல் அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதால் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி இரவு வரையில் சபரிமலை கோவில் சன்னிதானம், எலாவுன்கல், நிலக்கல், பம்பை, பத்தினம் திட்டா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்து உள்ளனர்.

Next Story