குஜராத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து: நடவடிக்கை எடுக்க விஜய் ரூபானி உத்தரவு
குஜராத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் போலீஸ் துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கேள்வித்தாள் வெளியான தகவல் தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வை நடத்தும் லோக்ரக்ஷக் தேர்வு வாரியத்தின் தலைவர் விகாஸ் சஹாய் இதை அறிவித்தார்.
கேள்வித்தாள் வெளியானது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறைக்கு முதல்–மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார். நீண்ட தூரத்தில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு ரத்தானதை அறிந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். டயர்களை கொளுத்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story