காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு


காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 5:40 AM GMT (Updated: 3 Dec 2018 5:40 AM GMT)

டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது  கூட்டம் இன்று  டெல்லியில் தொடங்கியது.  ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.  

மேகதாது பிரச்சனை குறித்து ஆணையத்திடம் தமிழகம் முறையிட்டது. மேலும் ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரானது என கூறி உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது.இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Next Story