நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்பட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் - புதிய தகவல்கள்


நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்பட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் - புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 9:32 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு (2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது.

காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார்.


Next Story