உத்தர பிரதேசம்: கல் வீச்சில் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம்: 2 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலந்த்சாகர் ,
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை ஏன் ஏற்பட்டது, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை தனியாக விட்டு ஏனைய போலீசார் சென்றது ஏன்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீரட் பகுதி ஏடிஜி பிரஷான்ந்த் குமார் தெரிவித்தார். புலந்த்சாகர் வன்முறை தொடர்பாக 27 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெயர் குறிப்பிடாமல் அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story