இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்
x
தினத்தந்தி 4 Dec 2018 2:57 PM IST (Updated: 4 Dec 2018 2:57 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரின் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி விடுவிக்க மறுத்து விட்டது.

டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆஜரான நிலையில் அவர் மீது குற்றச்சதி, சாட்சியங்களை கலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்த டி.டி.வி. தினகரன், வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story