தெலுங்கானா சட்டசபை தேர்தல்: வாகன சோதனையில் ரூ.5.8 கோடி பறிமுதல்


தெலுங்கானா சட்டசபை தேர்தல்: வாகன சோதனையில் ரூ.5.8 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:09 AM GMT (Updated: 4 Dec 2018 11:09 AM GMT)

தெலுங்கானா சட்டசபை தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ஐதராபாத்,

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல் கட்சிகளின் முயற்சியை தடுக்க மாநிலம் முழுவதும் வருவாய்துறை மற்றும் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை சிறப்பு அதிகாரிகள் போலீசார் துணையுடன் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாராங்கல் மாவட்டம் ஜன்கான் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி வழியாக நேற்றிரவு வேகமாக வந்த ஒரு காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி, இந்த பணத்தை கொண்டுவந்த 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்றிரவு ஐதராபாத் அருகிலுள்ள ராம்கோபால்பேட் பகுதியில் 70 லட்சம் ரூபாயுடன் வந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story