ஸ்டெர்லைட் விவகாரம்: பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளது.
வேதாந்தா குழுமத்தின் மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்திருக்கவே கூடாது. ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.
Related Tags :
Next Story