சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு: நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் இன்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்–மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.
சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெளியே பா.ஜனதாவினர் கண்டன பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. ஊடகத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கொல்லத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை அரங்கேறியது.
இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
Related Tags :
Next Story