வேலையின்மை விவகாரம்: ராகுல் காந்திக்கு பா.ஜனதா பதிலடி
வேலையின்மை விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் கடும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், பிரதமர் மோடியை ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை குறிப்பிடும் பெயரால் அழைத்து இருந்தார். இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது. அதில் ராகுல் காந்தியை இத்தாலி சர்வாதிகாரி முசோலியுடன் ஒப்பிட்டு உள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பா.ஜனதா கூறும்போது, ‘முசோலினியின் குறுகிய பார்வை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தொலைநோக்கில்லா புரிதலை ராகுல் காந்தி பெற்றிருப்பது தெளிவாகி இருக்கிறது. கடந்த 15 மாதங்களில் கூட நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை சரியான எந்த வேலையும் பெற்றிராத, வேலையே இல்லாத ஒரேயொருவர் மட்டும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளது.
Related Tags :
Next Story