சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமன வழக்கு: மேலும் ஒரு நீதிபதி விலகல் பின்னணி என்ன?


சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமன வழக்கு: மேலும் ஒரு நீதிபதி விலகல் பின்னணி என்ன?
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமன வழக்கின் விசாரணையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகினார். இதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி விட்டு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்து மத்திய அரசு கடந்த மாதம் 10-ந்தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது.

2 நீதிபதிகள் விலகல்

இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந்தேதி விலகினார்.

சி.பி.ஐ. புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

அதன்படி சிக்ரி தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சிக்ரியும் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மாவை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகாரக்குழுவில் இடம் பெற்றிருந்ததால்தான் சிக்ரி பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின.

நீதிபதி ரமணா

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி என்.வி. ரமணாவும் நேற்று விலகினார்.

இதன் பின்னணி பற்றி அவர் குறிப்பிடும்போது, “நாகேஸ்வரரராவ் எனது சொந்த மாநிலத்தை (ஆந்திரா) சேர்ந்தவர். அவரது மகள் திருமணத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன். எனவே இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய 3-வது நீதிபதி என்ற பெயரை அவர் பெறுகிறார்.

இதையடுத்து இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.

Next Story