ஹெலிகாப்டர் ஊழலில் நாடு கடத்தப்பட்ட துபாய் தொழிலதிபர் உள்பட 2 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை


ஹெலிகாப்டர் ஊழலில் நாடு கடத்தப்பட்ட துபாய் தொழிலதிபர் உள்பட 2 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 1 Feb 2019 3:00 AM IST (Updated: 1 Feb 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைது செய்யப்பட்ட துபாய் தொழில் அதிபர் உள்ளிட்ட 2 பேரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.

ரூ.460 கோடி பரிமாற்றம்

இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த டிசம்பர் மாதம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த ஊழலில் துபாய் தொழில் அதிபர் ராஜீவ் சம்ஷேர் பகதூர் சக்சேனா, இடைத்தரகர் தீபக் தல்வார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக ராஜீவ் சக்சேனாவின் நிறுவனங்கள் மூலம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் 58 மில்லியன் யூரோ (சுமார் ரூ.460 கோடி) தொகையை பல்வேறு நபர்களுக்கு கைமாறி இருப்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது.

நாடு கடத்த கோரிக்கை

இதைப்போல இடைத்தரகரான தீபக் தல்வார், இந்த ஒப்பந்தத்தில் சட்ட விரோத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் வழியாக ரூ.90.72 கோடி வரை முறைகேடு செய்ததையும் விசாரணை நிறுவனங்கள் கண்டுபிடித்தன. எனவே இவர்கள் 2 பேர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு இவர்கள் இருவருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. துபாயில் வசித்து வந்த அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அந்த நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

விமான நிலையத்தில் கைது

அதன்படி ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகிய இருவரையும் துபாய் அதிகாரிகள் கைது செய்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர்களை டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராஜீவ் சக்சேனாவுக்கு 4 நாட்களும், தீபக் தல்வாருக்கு 7 நாட்களும் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களிடம் விரிவான விசாரணை தொடங்கி உள்ளது.

முன்னதாக ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனாவின் மனைவி சிவானியை கடந்த 2017-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story