நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கியது மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு ஜனாதிபதி உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கியது. இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அவர் தனது உரையை, “இந்த ஆண்டு நமது ஜனநாயகத்தில் முக்கியமான ஆண்டு. தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கப்போகிறோம். நமது அரசியல் சாசனத்தின் 70-வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். சேவைமனப்பாங்குடன், நல்லெண்ணத்துடன் வாழ நம்மை வழிநடத்துகிற குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்” என்று கூறி தொடங்கினார்.
பா.ஜனதா அரசின் நோக்கம்
“2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக நமது நாடு அரசியல் நிலையற்ற தன்மையை சந்தித்தது. தேர்தல்களுக்கு பின்னர் இந்த அரசு பதவி ஏற்றது. அது, புதிய இந்தியாவை உருவாக்க சபதம் ஏற்றது. புதிய இந்தியாவில் குறைகளுக்கு, ஊழல்களுக்கு, செயலற்ற நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடம் கிடையாது. இந்த அரசு பதவி ஏற்ற நாள் தொடங்கி நமது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வெளிப்படையான தன்மையை கொண்டுவர வேண்டும், மோசமான ஆட்சித்திறனால் ஏற்பட்ட கஷ்டங்களை ஒழிக்க வேண்டும், அரசு நலத்திட்டங்கள் சமூகத்தின் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கமாக அமைந்தது” என மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் நோக்கத்தை குறிப்பிட்டார்.
புதிய நம்பிக்கை
அவர் தொடர்ந்து பேசுகையில், “கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் செல்வாக்கை உயர்த்திக்காட்டியது. சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மக்களின் அளவிட முடியாத நேசத்தையும், நம்பிக்கையையும் அரசு பெற்றது. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் உயர்த்துவதுதான் அரசின் முக்கிய இலக்கு” என கூறினார்.
சமையல் கியாஸ் இணைப்பில் சாதனை
மோடி அரசின் சாதனைகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டியலிட்டார். அவை வருமாறு:-
* விறகு அடுப்புகளில், புகை நிரம்பிய சமையலறைகளில் சமைத்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளான சகோதரிகளுக்கும், மகள்களுக் கும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 6 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் (இலவசமாக) தரப்பட்டுள்ளன.
* 2014-ம் ஆண்டு வரையில் நாட்டில் 12 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளே இருந்தன. இந்த அரசு 4½ ஆண்டு காலத்தில் 13 கோடி குடும்பங்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கி உள்ளது.
50 கோடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை
* ஏழைக்குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய அபியான் என்னும் மிகப்பெரிய திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலன் பெற 50 கோடி ஏழை மக்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். 4 மாத காலத்தில் இந்த திட்டத்தின்கீழ் 10 லட்சம் ஏழைகள் பலன் அடைந்துள்ளனர்.
21 கோடி பேருக்கு காப்பீட்டு பலன்
* மாதம் வெறும் 1 ரூபாய் கட்டணம் செலுத்தி பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தின்கீழும், தினமும் 90 காசுகள் கட்டணம் செலுத்தி பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின்கீழும், 21 கோடி ஏழை சகோதர, சகோதரிகள் காப்பீட்டு வசதி பெற்றுள்ளனர். இந்த திட்டங்களின்கீழ், அசம்பாவித சம்பவங்களின்போது, ரூ.2 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.3,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மதுரை (தமிழ்நாடு), புலவாமா (காஷ்மீர்), ராஜ்காட் (குஜராத்), காம்ரூப் (அசாம்) ஆகிய இடங்களில் புதிதாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் தொடங்கப்படுகின்றன.
* 2022-ம் ஆண்டுக்குள், நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, எந்தவொரு குடும்பமும் வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 4½ ஆண்டு காலத்தில் 1 கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
எல்லா கிராமங்களிலும் மின்சாரம்
* ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதின் அடிப்படையில், ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்றப்படுகிறது. 2014-ல் 18 ஆயிரம் கிராமங்கள் மின்சார வசதியின்றி இருந்தன. இன்று எல்லா கிராமங்களிலும் மின்சாரம் வந்துவிட்டது. பிரதம மந்திரி சவ்பாக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் 2 கோடியே 47 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு தரப்பட்டுள்ளது.
* இந்த அரசு பதவியேற்றபோது 8,300 ஆள் இல்லாத ரெயில்வே லெவல் கிராசிங்குகள் இருந்தன. அவற்றை ஒழிக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
* முஸ்லிம் சகோதரிகளின் அச்சமற்ற வாழ்வுக்காக, அவர்கள் நாட்டின் பிற சகோதரிகளை போன்று சம உரிமை பெற நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
இட ஒதுக்கீடு
* கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினரும் பெறுகிற வகையில், வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவாக அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளோம்.
* உலகிலேயே அதிக இளைய தலைமுறையினரை கொண்டுள்ள நாடு நமது நாடுதான். 21-ம் நூற்றாண்டின் இளைய தலைமுறையினரை கவர்கிற வகையில் இந்த அரசு கொள்கை முடிவுகளை எடுத்துவருகிறது.
15 கோடி பேருக்கு கடன்
* பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் உத்தரவாதம் எதுவும் பெறாமல் ரூ.7 லட்சம் கோடி தொழில், வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 15 கோடிக்கு மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். 4 கோடியே 26 லட்சம் பேர் முதல்முறையாக கடன்பெற்று தொழில் தொடங்கி உள்ளனர்.
* 22 விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொண்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை இந்த அரசு எடுத்துள்ளது.
* தொழில் கல்வி வழங்குவதற்காக 7 ஐ.ஐ.டி.கள் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 7 ஐ.ஐ.எம்.கள் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்), 14 ஐ.ஐ.ஐ.டி.கள் (இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 1 என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 4 என்.ஐ.டீ.கள் (தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம்) உருவாக்கப்படுகின்றன.
* ரூ.1 கோடி வரையிலான கடனை 50 நிமிடங்களில் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.
ஜன்தன் வங்கி கணக்கு
* ஜன்தன் யோஜனா திட்டத்தின் காரணமாக 34 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.88 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, “விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக பெருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக அரசு இரவு, பகலாக முயற்சித்து வருகிறது” என்று கூறினார்.
ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான யுத்தத்தில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மிக முக்கியமான நடவடிக்கையாக அமைந்தது என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார். கருப்பு பண புழக்கத்துக்கு காரணமான 3 லட்சத்து 38 ஆயிரம் செல் நிறுவனங்களை (பெயரளவில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள்) மூட வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் 4½ ஆண்டு கால சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் 7.3 சதவீதமாக அமைந்துள்ளது; உலகின் 2-வது பெரிய செல்போன் உற்பத்தி நாடாக இந்தியா உருவாகி உள்ளது; கங்கை என்பது நதி மட்டுமல்ல, நமது தாய்மாதிரி. கங்கையை சுத்திகரிக்க இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு
முடிவில் 130 கோடி இந்திய மக்களின் ஆதரவுடன் இந்த அரசு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தை தொடங்கி உள்ளது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story