மத்திய இடைக்கால பட்ஜெட் எப்படி? அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


மத்திய இடைக்கால பட்ஜெட் எப்படி? அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2019 2:43 PM IST (Updated: 1 Feb 2019 2:43 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  இரு அவைகளின்  கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்  நேற்று உரை நிகழ்த்தினார்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு;- 

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை, தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சரகம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.  

பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ளது சிறப்பான தரமான  பட்ஜெட்டாகும் என நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்ஜெட் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் குளிர்கால விசித்திர கதைபோல் உள்ளது.  பட்ஜெட்டை சிறப்பாக முடிக்க நினைத்தாலும் அதில் உள்ள அறிவிப்புகள் தாமதமாக வந்தவை தான் என திமுக எம்பி கனி மொழி கூறி உள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டு உதவித்தொகை ரூ.6,000 அறிவித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி கூறுகையில்,

மாதம் ஒன்றுக்கு ரூ. 500 வைத்து விவசாயிகள் கவுரவமாக வாழ முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது - பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.

வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெற வேண்டும் என்ற வகையில் மத்திய இடைக்கால பட்ஜெட் உள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை திட்டம் வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன் 

திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில்,

இது வாக்குகளை குறிவைக்கும் பட்ஜெட். மக்கள் மீதான அக்கறையால் அறிவித்த பட்ஜெட் இல்லை.

* அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் இருந்த போது மக்கள் பயன்பெறும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

* விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை குறிவைக்கும் பட்ஜெட்டை தேர்தல் ஆண்டில் அறிவிப்பது ஏன்?

* கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, தேர்தலை சந்திப்பதற்கு முன் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக அரசு இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story