வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மத்திய பட்ஜெட்டில் சலுகை மழை


வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மத்திய பட்ஜெட்டில் சலுகை மழை
x
தினத்தந்தி 2 Feb 2019 5:45 AM IST (Updated: 2 Feb 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

சலுகைகள்

நிதி இலாகா பொறுப்பை கவனிக்கும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே விவசாயிகள், நடுத்தர மக்கள், மாத சம்பளம் பெறுவோர் பயன்பெறும் வகையிலான பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு

மாத சம்பளம் பெறுவோர் பயன்பெறும் வகையில், வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது வரி விலக்கு உச்சவரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, மாத சம்பளம் பெறுவோரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு வருமான வரி கிடையாது.

மேலும் நிலைக்கழிவும் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கடனுக்கு சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஆண்டு வருமானம் ரூ.6½ லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியது இருக்காது.

வரி செலுத்துவோர் அதிகரிப்பு

இதன்மூலம் மாத சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சுயதொழில் செய்வோர், சிறு வணிகர்கள் என சுமார் 3 கோடி பேர் ஆண்டுக்கு 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், 10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவீத வரியும் தொடர்ந்து நீடிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் வரி கணக்குகள் தாக்கல் தொடர்பான அனைத்து பணிகளும் முற்றிலும் மின்னணு மயமாக்கப்படும். 2013-2014-ம் நிதி ஆண்டில் ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக இருந்த வரி வருவாய் தற்போது கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியே 79 லட்சத்தில் இருந்து 6 கோடியே 85 லட்சமாக உயர்ந்து உள்ளது.

பணிக்கொடை ரூ.30 லட்சமாக உயர்வு

இனி 2 வீடுகளுக்கு வீட்டுக் கடன் வட்டி சலுகை வழங்கப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் பணிக்காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கான நலநிதி ரூ.2.6 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்

22 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையை விட 1½ மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

2 ஹெக்டேருக்கும் குறைவான (சுமார் 5 ஏக்கர் வரை) சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு இந்த தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு ஆகும். இந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவு ஆகும்.

மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இதேபோல் கடன்களை ஒழுங்காக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு கடன்காலம் முழுவதும் 3 சதவீத வட்டி மானியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

ராணுவத்துக்கு ரூ.3 லட்சம் கோடி

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தில் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

2019-2020-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை என்ற பெயரில் தனி இலாகா ஒன்றை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 6 கோடி பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 2 கோடி பேருக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படும்.

உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

அமைப்புசாரா துறைகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுடைய நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் 100 ரூபாய் செலுத்தினால், 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ.) உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தேசிய அளவில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.38 ஆயிரத்து 572 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.27 ஆயிரத்து 584 கோடியும், வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக ரூ.58 ஆயிரத்து 166 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் மின்னணு மயமாக்கப்படும்.

22-வது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அரியானா மாநிலத்தில் அமைக்கப்படும்.

சினிமா படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும். சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை தடுக்க சினிமா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

பசுக்கள் மேம்பாட்டுக்காக ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏற்கனவே உள்ள இடஒதுக் கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. இதற்காக கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.

2019-2020-ம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாகவும், 2020-2021-ம் நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் இருக்கும்.

இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும். மேலும் இந்த ஆண்டில் மொத்த செலவு ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெற்று உள்ளன.

பா.ஜனதா உறுப்பினர்கள் மகிழ்ச்சி

மந்திரி பியூஸ் கோயல் பட்ஜெட் உரையை 100 நிமிடங்கள் வாசித்தார்.

விவசாயிகளுக்கு சலுகைகள், வருமான வரிவிலக்கு உச்சவரம்பு போன்ற சலுகைகளை அவர் அறிவித்த போது பாரதீய ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Next Story