அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் - அமித்ஷா உறுதி
அயோத்தியில் கூடிய விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டக்கோரி இந்து அமைப்புகள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்து ஆன்மிக தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பதிலளித்தார். உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறுகையில்,
‘அயோத்தி விவகாரத்தில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அங்கு கூடிய விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்’ என்று தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய அமித்ஷா, அயோத்தி பிரச்சினையில் தங்கள் நிலைப்பாடு குறித்து அந்த கட்சியினர் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைப்போல பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைத்து வரும் மகா கூட்டணியையும் அமித்ஷா குறைகூறினார். மோடியை தனியாக எதிர்க்க முடியாததால், ஒன்றையொன்று எதிர்த்து வரும் கட்சிகள் கூட இணைந்திருப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story