“ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான பட்ஜெட்” - கட்டுமான நிறுவனங்கள் வரவேற்பு


“ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான பட்ஜெட்” - கட்டுமான நிறுவனங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 3:30 AM IST (Updated: 3 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

இடைக்கால பட்ஜெட், ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமானது என்று கட்டுமான நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கட்டுமான நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ரஹேஜா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் நவீன் எம்.ரஹேஜா கூறியதாவது:-

மக்களின் வரிச்சுமையை குறைக்கும் மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த பட்ஜெட்டால், பெரிதும் பலன் அடைந்தவர்கள் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருவாய் உள்ள தனிநபர்கள்தான்.

மேலும், குறைந்தவிலை வீட்டு வசதி திட்டங்களுக்கு அனுமதி வாங்குவதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்புகள், ரியல் எஸ்டேட் துறை, நுகர்வோர் என இருதரப்புக்கும் சாதகமானவை. இதனால், குறைந்த விலை வீட்டு திட்டங்களுக்கு கிராக்கி அதிகரிக்கும்.

விற்பனை ஆகாத வீடுகளுக்கு வாடகை வசூலிப்பது 2 ஆண்டுகள் வரை கிடையாது என்று நீட்டித்து இருப்பது ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமானது. தனிநபர்களின் 2-வது வீட்டுக்கான வாடகை மீது வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது, வீடுகள் விற்பனை அதிகரிக்க உதவும்.

ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான வீட்டு வாடகை வருவாய்க்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது, வாடகை வருவாய் ஈட்டுபவர்களுக்கு பலன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story