திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம், விசாரணை தீவிரம்


திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம், விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 3 Feb 2019 6:55 PM IST (Updated: 3 Feb 2019 6:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


நகரி, 

திருப்பதி ரெயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜபெருமாள் கோவில் உள்ளது. 

திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் இந்த கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்வது வழக்கம். தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். 
இக்கோவிலில் சாமிக்கு அணிவிப்பதற்காக வைர, வைடூரிய கற்கள் பதிக்கப்பட்ட 3 தங்ககிரீடங்கள் இருந்தன.  உற்சவமூர்த்திகளான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய சாமிகளுக்கு இந்த தங்க கிரீடங்கள் பிரம்மோற்சவம் மற்றும் திருவிழா காலங்களில் அணிவிக்கப்படுவது வழக்கம். சாமி வீதியுலா முடிந்தவுடன் சரி பார்க்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படும். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு லாக்கரை திறந்து நகைகள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்ப்பது வழக்கம். இதுபோன்று நேற்று பாதுகாப்பு அதிகாரிகள் நகைகளை சரிபார்த்தனர். 

அப்போது சாமிக்கு அணிவிக்கும் 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால் மற்ற நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான கிரீடங்கள் மொத்தம் ஒரு கிலோ 348 கிராம் எடையுள்ளவை. கிருஷ்ணதேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி, போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதவிர 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story