கொல்கத்தா விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
கொல்கத்தா விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி
சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் குவிந்து உள்ளனர்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் எனக்கு ஆதரவாக உள்ளன என்று மம்தா பானர்ஜி ஊடகங்களில் பேசுகையில் தெரிவித்தார். சிபிஐ-மேற்கு வங்காள அரசு இடையேயான மோதல் இன்று பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பி உள்ளது.
மக்களவையில் சி.பி.ஐ.க்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இரங்கல் தீர்மானத்தை படித்த உடனே சிபிஐ விவகாரம் குறித்து மக்களவையில் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை அலுவல்களை சபாநாயகர் நடத்துகிறார். அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை தொடங்கியதும் சிபிஐ பிரச்சினையை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். சிபிஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story