விவசாயிகள் நிதி உதவி திட்டம், முதல் தவணைக்கு ஆதார் அவசியம் இல்லை; பின்னர் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு


விவசாயிகள் நிதி உதவி திட்டம், முதல் தவணைக்கு ஆதார் அவசியம் இல்லை; பின்னர் கட்டாயம் -  மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 9:04 PM IST (Updated: 4 Feb 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.


புதுடெல்லி, 

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  2 ஹெக்டேருக்கும் (சுமார் 5 ஏக்கர்) குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். 

இந்த நிதி ஆண்டில் (2019-2020) மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் குறித்து மத்திய அரசின் விவசாய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான முதல் தவணை மார்ச் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல் தவணைக்கு மட்டும் ஆதார் எண் அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பயனாளிகளின் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுக்கலாம். ஆனால் அதே சமயம் 2–வது தவணை பெறும் போது ஆதார் எண் அவசியம் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பயனாளிகளின் பெயர், நிலத்தின் அளவு, ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆண்/பெண் போன்ற விவரங்களை மாநில அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 1–ந் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. எனவே அதற்கு பிறகு வேறு யார் பெயரிலாவது நிலம் மாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த திட்டத்துக்கு தகுதி பெற இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story