ஆயுதங்களாலும், பசு பாதுகாவலர்களாலும் தேசத்தை வழிநடத்த முடியாது -மம்தா பானர்ஜி தாக்கு
ஆயுதங்களாலும், பசு பாதுகாவலர்களாலும் தேசத்தை வழிநடத்த முடியாது என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தா,
சாரதா சிட்பண்ட்ஸ், ரோஸ் வேலி மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவரின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோது போலீஸ் தடுத்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாக கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்த கொல்கத்தா போலீஸார், அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, கைது செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எனக்கு கிடைத்த வெற்றி கிடையாது, தேசத்துக்குக் கிடைத்ததாகும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இவ்விவகாரத்திற்கு இடையே உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்காளம் செல்கிறார். ஏற்கனவே அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரால் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. இப்போது சாலை மார்க்கமாக செல்கிறார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி பேசுகையில், “ஆயுதங்களாலும், பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்களாலும் தேசத்தை வழிநடத்த முடியாது. தேசம் அரசியலமைப்பின்படிதான் ஆட்சி செய்யப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
“எந்த ஒரு விசாரணை நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. அவர்களும் எங்களுடைய சகோதர சகோதரிகளே. ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்த நினைப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்,” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story