7–வது நாளாக நீடித்த பாகிஸ்தான் குண்டுவீச்சில் பெண் பலி; ராணுவ வீரர் காயம்


7–வது நாளாக நீடித்த பாகிஸ்தான் குண்டுவீச்சில் பெண் பலி; ராணுவ வீரர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2019 11:35 PM GMT (Updated: 28 Feb 2019 11:35 PM GMT)

எல்லைப்பகுதியில் 7–வது நாளாக பாகிஸ்தான் குண்டு வீசியதில் ஒரு பெண் பலியானார். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். பதற்றம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஜம்மு,

2003–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிக்காமல், தொடர்ந்து எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில்தான் காஷ்மீர் புலவாமா பகுதியில் கடந்த 14–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான கார் குண்டு தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர், காஷ்மீர் எல்லையில் அத்துமீறி குண்டு வீச்சு நடத்துகின்றனர். பீரங்கி தாக்குதலும் நடத்துகின்றனர்.

தொடர்ந்து 7–வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதுபற்றி ராணுவ மக்கள் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘இன்று (நேற்று) காலை 6 மணிக்கே பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறிய தாக்குதல்கள் நடத்தத் தொடங்கினர். அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் அத்துமீறி குண்டு வீசியபோது, இந்தியப்படையினரும் சரியான பதிலடி கொடுத்தனர்’’ என்றார்.

இந்தநிலையில் பிற்பகல் 1 மணிக்கு ஒரே நாளில் இரண்டாவது முறையாக கிருஷ்ணா காதி செக்டாரில் பாகிஸ்தான் துருப்புகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

மூன்றாவது முறையாக, பிற்பகல் 2.15 மணிக்கு, ரஜவுரி மாவட்டம் நவுசேரா செக்டாரில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் 6 செக்டார்களில் ஒரே நாளில் 3 தடவை தாக்குதல் நடத்தியது. இதில், மெந்தார் பகுதியில் ஒரு பெண் பலியானார். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.

இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

பதற்றம் தொடருவதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையையொட்டி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களில் பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பா மாவட்டத்திலும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். உறுதிபடுத்தப்படாத தகவல்களை, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பரப்பக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story