விமானி அபிநந்தனை சிறப்புடன் வரவேற்க எல்லையில் குவிந்த பொதுமக்கள்


விமானி அபிநந்தனை சிறப்புடன் வரவேற்க எல்லையில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 March 2019 1:35 PM IST (Updated: 1 March 2019 1:35 PM IST)
t-max-icont-min-icon

விமானி அபிநந்தனை அட்டாரி எல்லை பகுதியில் மேளம் அடித்து சிறப்புடன் வரவேற்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

அட்டாரி,

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் கடந்த 26ந்தேதி வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன.  ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்றை இந்தியா இழக்க நேரிட்டது.

அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால், அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. இவர் சென்னையை சேர்ந்தவர்.  இவரது தந்தையும் இந்திய விமான படையில் பணியாற்றியவர்.

இந்த நிலையில், பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தனை ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.  இதற்கு அந்நாடு ஒப்புதல் அளித்தது.  இதன்படி இன்று பிற்பகல் அபிநந்தன் அட்டாரி எல்லை வழியே இந்தியாவுக்கு வருகிறார்.

இதனால் அவரை வரவேற்க, எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் பாடல்களை படித்தபடி உள்ளனர்.  மேளங்களை இசைத்தபடியும் மற்றும் மூவர்ண கொடிகளை கைகளில் ஏந்தியபடியும் உள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் மக்கள் நாட்டுப்பற்று பாடல்களுடன், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.

இதேபோன்று சீக்கிய இளைஞர் ஒருவர் பெரிய மலர்மாலையை கையில் ஏந்தியபடி, எனக்கு அனுமதி வழங்கினால், இந்த மலர்மாலையுடன் விமானியை வரவேற்க விரும்புகிறேன் என கூறினார்.  வயது முதிர்ந்த நபர் ஒருவர் மேளம் இசைத்து கொண்டு உள்ளார்.

பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் இந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் பலர், பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்திற்கு உதவி செய்வது மற்றும் அதனை ஊக்குவிப்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் அல்லது தொடர் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story