அரசு நிறுவனம் இருக்கும்போது அதானி எதற்கு? மத்திய அரசுக்கு கேரளா எதிர்ப்பு
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. விமான நிலையங்களை எடுக்கும் தனியார் நிறுவனம் 100 சதவீத முதலீட்டை வழங்கும். வருவாயில் குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் மத்திய அரசின் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும். அரசு - தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய பராமரிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே 6 விமான நிலையங்களில் கவுகாத்தி விமான நிலையம் தவிர்த்து 5 விமான நிலையங்களை சாதகமான தொகைக்கு அதானி நிறுவனம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியது. 5 விமான நிலையங்களையும் அதானி நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைக்கலாம் என கூறப்படுகிறது. இப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்களை மேம்படுத்தும் மற்றும் பராமரிக்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இப்போது விமான நிலையத்தை நடத்துவதில் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அதனை மத்திய அரசு கைவிட வேண்டும். கேரள அரசு நிறுவனத்திடம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வழங்குவதால் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே பயன்பெறும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்காக மாநில அரசு 650 ஏக்கருக்கு அதிகமான நிலத்தை எடுத்துள்ளது, ஆனால் தனியார் நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story