இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு துணை நிற்கிறது - ராஜ்நாத்சிங்
பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தினர். இந்தத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப் படை 'மீராஜ் 2000' ரக போர் விமானங்களை கொண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் போர் கைதியாக சிக்கினார். அவர் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மற்றொருபுறம் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவை அழைத்ததால் பாகிஸ்தான் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு துணை நிற்கிறது.
அத்துடன் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தில் இந்தியா முதல் முறையாக பங்கேற்றுள்ளது.
பயங்கரவாதத்தை பொறுத்தவரை அது ஒரு சாதி, மதம் தொடர்புடையதாக கருத முடியாது. பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. "சிலர் பயங்கரவாதத்தை மதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள், இது சரியானது அல்ல." என்றார். மேலும் தேசிய புலானாய்வு அமைப்பின் துரித நடவடிக்கையால் பயங்கரவாதத்திற்கு செல்லும் நிதிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story