வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்


வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்
x
தினத்தந்தி 1 March 2019 9:35 PM IST (Updated: 1 March 2019 9:37 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

புதுடெல்லி,

கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து,  அபிநந்தனை அட்டாரி-வாகா எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன. அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் அப்பகுதியில் கூடினர். மேளதாளங்கள் முழங்க, தேசியக்கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்திய ராணுவ வீரர்கள் சூழ மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் அடியெடுத்து வைத்தார். 

பாகிஸ்தானில் இருந்து 75 மணி நேரத்திற்கு பின் தாய் மண்ணில் கால் பதித்தார் விமானப்படை வீரர் அபிநந்தன். 5 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அபிநந்தனை ஒப்படைப்பதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story